ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிற்சங்க ஓய்வூதியோர் நலச்சங்கம் சார்பில் இன்று (30 ஆம் தேதி) ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மாது, தலைமை தாங்கினார். தொ.மு.ச. மண்டல பொறுப்பாளர் குழந்தைசாமி உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்கள் கூறும்போது, “ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாதம் வழங்கவேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பண பலன்கள் உடனே அரசு வழங்க வேண்டும்.
சிக்கன கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் 9 ஆண்டு காலமாக வழங்காமல் உள்ள ஈவு-வட்டித் தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி செய்துகொடுக்க வேண்டும்.” என்றனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
அதே போல், சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கத்தின் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துகொன்டவர்கள், “14 ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும். கரோனாவால் உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் அரசு நிதியுதவி வழங்க வேண்டும். பகுதி அளவில் இல்லாமல் முழுமையாக பஸ்களை இயக்க வேண்டும்.” என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.