தமிழகத்தில் கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 10, 12ஆம் மாணவர்களுக்கு மட்டும் நாளை (ஜன.19) முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதையொட்டி, மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காக விட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது நோய்த் தொற்றின் வேகம் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜன.19) முதல், முதற்கட்டமாக எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்2 மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு மற்றும் நீட் தேர்வுகளைக் கருத்தில்கொண்டு இவ்விரு பிரிவு மாணவர்களுக்காக தற்போது வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. எனினும், பள்ளிக்கு வருவது மாணவர்கள், பெற்றோர்களின் சொந்த விருப்பத்தைப் பொருத்தது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நோக்கில் விட்டமின் மாத்திரைகள், துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், மாணவர்களுக்கு வழங்க, 3.84 கோடி மாத்திரைகள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.
இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ''தமிழ்நாட்டில் ஜன.19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் எந்தக் காரணத்திற்காகவும் கரோனா உள்ளிட்ட நோய் பாதிப்புக்கு ஆளாகி விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்காக 10 விட்டமின் மாத்திரைகள், 10 துத்தநாக மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளிகளுக்கு வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள், தலா 1.92 கோடியே 130 மாத்திரைகள் வீதம், மொத்தம் 3.84 கோடி மாத்திரைகள் அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சேலம் மண்டலத்தைப் பொறுத்தவரை, சேலம் மாவட்டத்திற்கு 17,76,320 மாத்திரைகளும், நாமக்கல் மாவட்டத்திற்கு 9,00,900 மாத்திரைகளும், தர்மபுரி மாவட்டத்திற்கு 8,71,880 மாத்திரைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 10,54,920 மாத்திரைகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் கிடங்கிற்கு சென்று, அதன் பொறுப்பாளரிடம் மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ளலாம். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அல்லது மூத்த தலைமை ஆசிரியரை இப்பணிக்காக தனி அலுவலராக நியமிக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜன.18ஆம் தேதிக்குள் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட வேண்டும்'' என்றனர்.