
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது.
தமிழகம் முழுவதும் இதுவரை 6.20 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 5.5 லட்சம் ஆக உள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமுடக்கமும் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வரைமுறைக்குள் வரும் சில பொது இடங்கள் மட்டும் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பான ஆய்வுக் கூட்டங்களை தமிழக முதல்வர் தொடர்ந்து மாவட்டம் தோறும் நடத்திவருகிறார். அதன் ஒரு பகுதியாக கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக 3 மாவட்டங்களில் அக். 13, 14ஆம் தேதிகளில் முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். 13ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திலும், 14ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.