Skip to main content

“பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, ‘கொத்தடிமையாக’...” - இபிஎஸ்-ஐ விமர்சித்த முதல்வர்

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

CM criticizes EPS on Delhi Service Bill

 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று மக்களவை மற்றும் மாநிலங்களவைகளில் டெல்லி சேவை மசோதா நிறைவேறியது. டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதையும், ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றவும், நியமிக்கவும் துணைநிலை ஆளுநருக்கே இறுதி அதிகாரம் உள்ளது என்ற வகையில் மத்திய அரசு உருவாக்கியுள்ள இந்த மசோதா கடந்த 3 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகி 8 மணிநேர விவாதத்திற்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில் தமிழக முதல்வர், ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி சேவை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள். எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?

 

29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள். மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. “நான் யாருக்கும் அடிமையில்லை” என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, ‘கொத்தடிமையாக’ தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்