தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி பின்னர் அடுத்தக்கட்ட முடிவை எடுப்பேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மு.க.அழகிரி நேற்று காலை தனது குடும்பத்தினருடன் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
என் தந்தையிடம் என் ஆதங்கத்தை வேண்டிகொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. தலைவர் கலைஞர் அவர்களின் உன்மையான அனைத்து விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லாம் என் பக்கம் உள்ளனர் என்னை ஆதரித்துக்கொண்டிருக்கின்றனர். இதற்கு காலம் பின்னால் பதில் சொல்லும். என்னுடைய ஆதங்கம் கட்சி தொடர்புடையது தான். திமுக செயற்குழு கூட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் தற்போது திமுகவில் இல்லை என கூறினார்.
இதைதொடர்ந்து, அடுத்தடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில், கட்சி ரீதியான எனது ஆதங்கம் குறித்து இரண்டு அல்லது மூன்று நாட்களில் சொல்கிறேன். நான் திமுகவிற்கு மீண்டும் வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. நான் வந்தால் வலிமையான தலைவராகி விடுவேன் என அச்சப்படுகிறார்கள். திமுகவில் கட்சிப்பொறுப்புகள் விற்கப்படுகின்றன என அவர் கூறினார்.
இந்நிலையில், ஆங்கில இணையதளம் ஒன்றிற்கு மு.க.அழகிரி அளித்த பேட்டியில்,
தமிழகம் முழுவதும் உள்ள எனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தி பின்னர் அடுத்தக்கட்ட முடிவை எடுப்பேன். கடந்த மூன்று ஆண்டுகளாக தேர்தலில் திமுக பெற்ற தோல்விகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அதேபோல், எதிர்க்கால திட்டம் குறித்தும் ஆலோசனை செய்யப்படும்.
நான் ஒரு தலைவராக ஆக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்ததில்லை. கலைஞர் இருந்த போது, அவர் தான் எம்.பி பதவி கொடுத்தார். வேண்டாம் என்றுதான் அவரிடம் கூறினேன். தென்மண்டல பொறுப்பாளர் பதவியையும் பேராசிரியர் அன்பழகனும், கலைஞரும் தான் கொடுத்தார்கள். என்னை ஏற்றுக் கொள்ளுமாறும் கூறினர். திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் அந்த பதவியை கொடுத்தார்கள். நான் எதனையும் கேட்கவில்லை. மதுரை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர் என்றார்.