தமிழ்நாட்டில் கரோனா தொற்றுநோய் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, இனி அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் வாரத்தில் 6 நாட்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவியதால் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில், அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த உத்தரவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள், சுயநிதி கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் வாரம் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தற்போதைய செமஸ்டருக்கான வகுப்புகள் வாரத்தில் 6 நாட்கள் நேரடியாக நடத்த வேண்டும். ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன.
எனவே, செமஸ்டர் தேர்வுகள், இறுதித் தேர்வுகளுக்கு முன்பாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதற்கு வசதியாக பாடத்திட்டங்களை வழங்க வேண்டும். பாடத்திட்டங்களின்படி பாடங்களை நடத்தி முடித்த கல்லூரிகளில் திரும்பவும் வகுப்புகள் நடத்த வேண்டும்.
குறிப்பாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தியிருந்தால் திரும்பவும் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரிக்கல்வி இயக்குநர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். கல்லூரிகள், வாரத்தில் 6 நாட்கள் நடக்கிறதா என்றும், ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளனரா என்றும் கண்காணிக்க வேண்டும்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுகள் குறித்தும் ஏற்கனவே உள்ள தேதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் உறுதிசெய்துகொள்வதுடன், மாற்றம் செய்யப்பட்ட அட்டவணையை அனுப்பிவைக்க வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் மேற்சொன்ன உத்தரவின்படி செயல்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்." இவ்வாறு உயர்கல்வித்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.