அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள அண்ணா சிலை அருகில் திமுக - அதிமுக இரு கட்சிகளின் ஒன்றிய அலுவலகங்கள் ஒரே இடத்தில் அருகருகே உள்ளன. அதிமுக அலுவலகத்தில் ஒரு பகுதியை கடை கட்டி வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் அந்த கடைக்கு வரும் பொதுமக்களால் கட்சி அலுவலக செயல்பாடுகள் பாதிக்கக்கூடும் என்று திமுகவினர் கருதினர்.
இதனால் அந்த இடத்தில் கடை கட்டக்கூடாது நாங்கள் ஏற்கனவே அந்த இடத்தில் சிலை வைக்க முடிவு செய்திருக்கிறோம் என்று திமுகவினர் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த அதிமுகவினர் கடை கட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து இடத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றனர். இதனை அறிந்த திமுகவினர் கூடாரத்தை அடித்து நொறுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமைடந்த அதிமுகவினர் ஒன்று திரண்டனர், அதேபோல திமுகவினரும் ஒன்று திரண்டனர். இதனால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டு கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது. அதில் சில காவல்துறையினருக்கும் கட்சியினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான இளம்பை தமிழ்ச்செல்வன் செந்துறை விரைந்து சென்று கட்சியினரை ஒன்று கூட்டி, அவர் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்காரன் அப்துல்லா, டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து முறைப்படி புகார் அளிக்குமாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ், அவைத்தலைவர் செல்வம், முருகன் 'கலியமூர்த்தி', அழகுதுரை ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதேபோல், திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் எழில்மாறன். தலைமையில் திமுகவினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இந்த சம்பவத்தின் காரணமாக செந்துறையில் பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.