வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் பூங்கா எதிரே கோட்டை சுற்றுச்சாலையில் தெற்கு காவல் நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் திமுக பிரமுகரான சுதாகர் வந்த காரை நிறுத்திய போலீசார் காரின் ஆவணங்கள் மற்றும் லைசன்ஸ் உள்ளிட்டவற்றைக் காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.
கார் ஓட்டிவந்தவர் ஆவணங்கள் கையில் இல்லை என்றும், செல்போனில் இருப்பதாகவும் சுதாகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் செல்போனில் உள்ள ஆவணங்களை காரை ஓரம் நிறுத்திவிட்டுக் காண்பியுங்கள் என போலீசார் கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த நபர் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு போலீசாரிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நடுரோட்டில் நிறுத்தப்பட்ட காரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அந்த வீடியோவில், கவுன்சிலர் சுதாகரிடம் உரிய ஆவணங்களைக் காண்பிக்காததால், வாகனத்தைப் பறிமுதல் செய்வோம் என போலீசார் கூறுகின்றனர். அதற்கு அந்த நபர்,"வண்டி அடிபட்டு ஷோரூமில் இருந்து வந்து இரண்டு நாள் தான் ஆகிறது, வண்டியில் ஆவணங்கள் இல்லை என்று கூறுகிறார். எதிர் தரப்பில் எஸ். எஸ்.ஐ ஒருவர் ,"முதலில் ஒருமையில் பேசிவிட்டு தற்போது சார் என்று மரியாதையா பேசற, என்ன புடுங்கிடுவிங்கன்னு கேட்ட இப்போ எதற்காக பம்முற எனக்கேட்க, அதனை போலீஸ் வீடியோ எடுத்தது. “காரில் வந்த நபர் இங்கு இருப்பவர்கள் வீடியோ எடுக்கிறார்கள், அதனால்..” என்று பதில் கூறுகிறார். நடுரோட்டில் நிறுத்தப்பட்ட காரால் வாகன நெரிசல் ஏற்படவே, காரை ஓரம் எடுத்து நிறுத்துங்கள் அல்லது சாவியை கொடுங்கள் என்று போலீசார் கேட்கின்றனர். ஆவணங்களை காட்ட அந்த நபர் செல்போனை எடுத்தபோது, போலீசார் அந்த நபரின் செல்போனை பறித்துக்கொண்டனர்.
பின்னர் அந்த நபர் நான் எஸ் பியிடம் பேசுகிறேன் என்று போலீசாரிடம் மீண்டும் வாக்குவாதம் செய்கிறார். அதற்கு பதில் அளித்த போலீசார், யாரிடம் வேண்டுமானாலும் பேசுங்கள். ஆவணங்களைக் காண்பித்தால் வாகனத்தை விட போகிறோம். அதை விட்டுவிட்டு தேவையில்லாத வார்த்தைகளைப் பேசினால் என்ன அர்த்தம் ஒழிச்சிடுவோம் என ஜாக்கிரதை... என மிரட்டுகின்றனர். வண்டியை ஓரம் எடுத்து விடுங்கள் என்று போலீசார் கேட்டும் அதனை பொருட்படுத்தாத அந்த நபர்,"நாளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறேன் என்றும், நீங்கள் காரை பறிமுதல் செய்து எடுத்துச் செல்லுங்கள் என்கிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது. தகவல் அறிந்து பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் பேச்சுவார்த்தை நடத்தி காரை ஓரம் கட்ட சொல்லியதை அடுத்து அந்த நபர் காரை ஓரம் கட்டினார்.
இதுகுறித்து கவுன்சிலர் தரப்போ, முதலில் மரியாதை இல்லாமல் பேசியது அங்கிருந்த காவலர்கள் தான். அதனால் தான் இவர் பதிலுக்கு பேசவேண்டியதாகிவிட்டது. போலிஸார் கவுன்சிலரை அடிக்க பாய்ந்தார்கள், அவரை ஒருமையில் பேசினார்கள், அந்த வீடியோவை பாருங்கள் நன்றாக அது தெரியும். போலிஸார் கும்பலாக இருந்ததால் வீடியோ எடுத்து இவரை மிரட்டி ஆளும்கட்சி கவுன்சிலர் அராஜகம் என காட்ட முயன்றார்கள். ஆவணங்களை அனுப்பச்சொல்கிறேன் எனச்சொன்னபோது, ஒர்ஜினல் ஆவணம் தான் வேண்டும் எனக்கேட்டு தங்களது அதிகாரத்தை காட்டி ரவுடியை கையாளுவது போல் போலீஸார் பொது இடத்தில் செய்தனர். பிரச்சனை எதனால் வந்தது என்பதை சொல்லாமல் போலீஸ் தங்கள் தரப்பை மட்டும் சொல்லி எதிராலியை குற்றவாளியாக்குகிறது. அவர்கள் வழக்குப் போடட்டும் நான் பார்த்துக்கொள்கிறோம் எனச்சொன்னார் என்கிறார்கள்.