Skip to main content

கிறிஸ்துமஸ் திருநாள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Christmas Day; Greetings from Chief Minister M.K.Stal

கிறிஸ்துமஸ் பண்டிகை  நாளை (டிசம்பர் 25 ஆம் தேதி) திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில். “‘கோபமும் பொறாமையும் மனிதனைக் கொன்றுவிடும் சக்தி படைத்தவை’, ‘நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதை உடனே செய். அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய்’ என்பன போன்ற தனி மனிதரின் உள்ளத்தைப் பக்குவப்படுத்தி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் போதனைகளை வழங்கிய புனிதர் இயேசுநாதர். அவர் பிறந்த திருநாள் ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 25 அன்று உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

கிறித்தவ சமயத்தைப் பரப்பிடத் தமிழ்நாடு வந்த தொண்டர்கள் பலர். அவர்களுள் தமிழ்மொழி மீது கொண்ட பற்றால், தமிழ் மாணவன் என்று தம் கல்லறையில் எழுதச் செய்த அறிஞர் ஜி.யு.போப், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் படைத்து, தமிழ் செம்மொழி எனப் பறைசாற்றிய அறிஞர் கால்டுவெல், சதுர் அகராதி தந்து, தமிழ் அகராதியின் தந்தை எனப் போற்றப்படும் வீரமாமுனிவர், தமிழ்நாட்டிற்கு அச்சு இயந்திரத்தை முதன்முதல் கொண்டுவந்து தமிழ்நூல்கள் அனைத்தும் அச்சு வடிவம் கொள்ளத் துணைபுரிந்த சீகன் பால்கு ஐயர் முதலான சான்றோர்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டுகள் வியக்கத்தக்கவை. இதில் பல பெருமக்களுக்கெல்லாம் நன்றியுணர்வோடு, சிலைகள் நிறுவி மண்ணில் அவர்கள் புகழ் என்றும் நின்று நிலவச் செய்துள்ளது திமுக அரசு.

மேலும், 2021-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், உபதேசியார் நல வாரியம், சிறுபான்மையினர் விடுதி மாணவ மாணவியர்க்கு சிறுபான்மையினர் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவு, கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவிச் சங்கம் கூடுதலாக துவங்கிட நிதி ஒதுக்கீடு, ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்வு, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் அதிகக் கடன்கள் என நமது திராவிட மாடல் அரசின் சார்பில் கிறித்தவ மக்களுக்காக எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கெல்லாம் மணிமகுடமாக, கிறித்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமெனச் சட்டப்பேரவையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நான் தனித் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளேன். அனைத்துச் சமுதாய மக்களையும் அரவணைத்து அன்பு காட்டிடும் இந்த அரசின் சார்பில் கிறித்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்