திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளருமான இ.பெரியசாமி அவர்கள் நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது சின்னாளபட்டி சிறப்புநிலை பேரூராட்சி வளர்ந்து வரும் பேரூராட்சியாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளில் அதிக மக்கள் தொகை கொண்ட சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மழைக்காலங்களில் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக சிக்கனம்பட்டி வடக்குத் தெரு, செக்காபட்டி பகுதியில் மழைநீருடன், கழிவுநீரும் தேங்குவதால் அப்பகுதி மக்கள் பலவித தொற்றுநோய்க்கு ஆளாகின்றனர்.
சின்னாளபட்டியைச் சுற்றியுள்ள மேலக்கோட்டை, அம்பாத்துரை, காந்திகிராமம் ஆகிய கிராமங்கள் இணையக்கூடிய அளவிற்கு சின்னாளபட்டி பேரூராட்சி வளர்ந்து வருகிறது. தமிழக அரசு தி.மு.க. ஆட்சியில் (கலைஞர் ஆட்சி) செயல்படுத்தியது போல் பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுச்சாமி சின்னாளபட்டி பேரூராட்சியில் மக்கள் தொகை மற்றும் வெளியேறும் கழிவுநீர் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முன்னுரிமை கொடுத்து பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். அதன்பின் பேசிய தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி சின்னாளபட்டி பேரூராட்சியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26 ஆயிரத்து 255 பேர் உள்ளனர். பேரூராட்சியில் வெளியேறும் கழிவுநீர் அடிப்படையில் உரிய ஆய்வு கொண்டு கசடு கழிவு மேலாண்மை திட்டம் முன்னுரிமை அடிப்படையில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதை தொடர்ந்து பேசிய இ.பெரியசாமி சின்னாளபட்டியைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் எரிதகன மேடைக்கு செல்ல வேண்டும் என்றால் திண்டுக்கல்லுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. சின்னாளபட்டியில் எரிதகன மேடை அமைத்துக் கொடுத்தால் கிராம மக்கள் சிரமமில்லாமல் எரிதகன மேடையை பயன்படுத்துவார்கள் என்றார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் வேலுமணி தொகுதி மக்கள் அக்கறை கொண்டு சட்டமன்ற உறுப்பினர் இ.பெரியசாமி அவர்களின் கோரிக்கை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முன்னுரிமை அடிப்படையில் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றார். ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டி நகர மக்களின் நலன் கருதி சின்னாளபட்டியில் வசிக்கும் சாயத்தொழிலாளர்களுக்கு டையிங் யூனிட்டும், பாதாள சாக்கடை திட்டம், எரிதகன மேடை அமைத்துக் கொடுக்க சட்டப்பேரவையில் பேசிய திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமிக்கு சின்னாளபட்டி வட்டார வணிகர்கள், வர்த்தகர்கள், சாயத்தொழிலாளர்கள், பொதுமக்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்!