சிதம்பரம் அருகே கிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இவர்களின் நினைவை அனுசரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியிலுள்ள மீனவ சமூக மக்கள் அவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி கடலில் பூ தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.
16ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, கிள்ளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீனவ சமூக மக்கள் கிள்ளையிலிருந்து மலர் வளையத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று சின்ன வாய்க்கால் மற்றும் பில்லு மேடு பகுதியில் உள்ள நினைவு தூனில் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள கடல்நீரில் மலர்தூவி, பாலூற்றி பலியானவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கலைமணி, முன்னாள் மீன்வளத்துறை வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, அ.தி.மு.க. மாவட்ட கழக துணைச் செயலாளர் தேன்மொழி காத்தவராயன், கிள்ளை கிராம தலைவர் தேவநாதன், சின்ன வாய்க்கால் கிராம தலைவர் சங்கர், பில்லுமேடு தலைவர் கோவிந்தன், பட்டரையடி கிராம தலைவர் கலை தமிழன், படகு உரிமையாளர் கூட்டுறவு சங்க தலைவர் மதியழகன், கிள்ளை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், மீனவ மகளிர் கூட்டுறவு சங்க தலைவர் சங்கேஸ்வரி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.