தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் ஏனைய துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தலைமை செயலாளர் சிவ தாஸ் மீனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், “பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நகரின் ஏனைய பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் மற்றும் திறந்தவெளிகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்திய பின்னர், பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும். பூச்சிக்கொல்லி தெளித்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். மின்சாரம் தடைபட்ட இடங்கள் மற்றும் தெருக்களைக் கண்டறிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இலை தழைகள் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட வேண்டும்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதுடன், கூடுதல் பணியாக கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும் ஜெட் ரோடிங் இயந்திரங்கள், அதிக திறன் கொண்ட உறிஞ்சி இயந்திரங்கள் மற்றும் கழிவுநீரகற்றும் கொள்கலன் ஊர்திகளை (sewerage Tankers) ஏனைய இடங்களிலிருந்து வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியவாறு பயன்படுத்த வேண்டும்.
பால் விநியோகம் மற்றும் பிற இன்றியமையாப் பொருட்களின் இருப்பினைக் கணக்கிடுங்கள். எந்தவொரு வணிகரும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்யவும். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைக் காட்டிலும் அதிக விலை வைத்து பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும். பொதுமக்களின் நலன்கருதி, தோட்டக்கலை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 150 நடமாடும் காய்கறி கடைகளை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காய்கறிகளுடன் சேர்த்து பாலையும் விற்பனையாளர்கள் விற்பனை செய்வார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் திறக்கப்படும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும். அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்” என அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.