வேலூர் மாவட்டம், ஆம்பூர் தேவலாபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணன். இவர் தனது மகன்கள் கிஷோர், கவுசிக்குடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுக்கொண்டு இருந்தார். தங்கநாற்கர சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டு இருந்த சரவணன் வாணியம்பாடி அடுத்த புருஷோத்தமங்குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு கார் ஒன்று வந்துக்கொண்டுயிருந்தது. அந்தக் கார் இருசக்கரவாகனத்தின் மீது மோதியதோடு அதன் அருகே சென்றுக்கொண்டு இருந்த லோடு ஆட்டோ மீதும் மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சரவணனின் கால் எலும்பு முறிந்தது, குழந்தைகளுக்கு அடிப்பட்டது. அங்கு கூட்டம் கூடி 108 ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் போன் செய்துவிட்டு காத்திருந்தனர்.
இதற்கிடையில் கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் நடத்தி வைத்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் ஆளும் கட்சியினர் கலந்துக்கொண்டனர். அந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதியம் கிருஷ்ணகிரியில் இருந்து முதல்வர், துணை முதல்வர் தனித்தனி கார்களில் புறப்பட்டு சென்னை திரும்பினர். இவர்களின் கான்வே நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி வழியாக வந்தது.
அப்போது மக்கள் கூட்டம் சாலையில் இருப்பதை பார்த்து காரை ஓரம் கட்டி நிறுத்திய எடப்பாடி பழனிசாமி என்னவென விசாரித்தார். விபத்து பற்றிய தகவல் தெரிந்ததும் காரைவிட்டு இறங்கிச்சென்று விபத்தில் அடிப்பட்டவர்களை தனக்காக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்துவிட்டு கலெக்டர், எஸ்.பியிடம் மருத்துவம் பார்க்கச் சொல்லுங்க என உத்தரவிட்டுவிட்டு கிளம்பிச் சென்றார். முதல்வர் காருக்கு முன்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார் சென்றது. அவர் இந்த நிகழ்வை பார்த்தும் கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டார் என கூறப்படுகிறது.