Skip to main content

தமிழ்நாடு - சிங்கப்பூர் வர்த்தக உறவுகளை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Chief Minister Stalin's suggestion to improve Tamilnadu-Singapore trade relations!

 

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்குள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சென்னையில் ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைக்கவும் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். 

 

சிங்கப்பூரில் Temasek, sembcorp, CapitaLand நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை இன்று சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை வைத்ததுடன் சென்னையில் நடக்கவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.

 

அதன் தொடர்ச்சியாக சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும் புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்தும் உரையாடினார். இச்சந்திப்பின்போது அமைச்சர் ஈஸ்வரன் வழக்கமான முதலீடுகள் தவிர பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது குறித்தும் செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் உதிரிப்பாகங்கள் தயாரிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஸ்டாலினிடம் விவரித்திருக்கிறார்.

 

மேலும், அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் Fintech மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசின் குழுவை அனுப்பிடவும் கேட்டுக் கொண்டார் ஈஸ்வரன். அப்போது "சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் பசுமை சக்தியை உருவாக்குவது குறித்தும் பேசி வருகிறோம்" என்று அமைச்சர் ஈஸ்வரனிடம் தெரிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக மு.க.ஸ்டாலினை பாராட்டினார் ஈஸ்வரன். 

 

இச்சந்திப்பின்போது தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்