சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். மேலும் இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பட்டமளிப்பு விழாவிற்கு வந்தது வரலாற்றில் முக்கியமான நாள். பல்கலை. மானிய குழுவான யுஜிசி சிறந்து விளங்கும் பல்கலைக்கழகம் என்ற பட்டத்தைச் சென்னை பல்கலைக்கழகத்திற்கு அளித்துள்ளது. நோபல் பரிசு பெற்ற சர்.சிவி.ராமன் இங்குதான் படித்தார். இப்போது முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி, பேரறிஞர் அண்ணா எனப் பெரிய பெரிய தலைவர்கள் அதிகாரிகள், நீதிபதிகள் எனப் பலரும் இங்குதான் படித்தார்கள். ஏன் உங்கள் முன்பு நின்று பேசும் நானும் கூட சென்னை பல்கலைக்கழகத்தில் தான் படித்தேன். உங்களின் சீனியராக நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். கடந்த 165 ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்பைச் சென்னை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. அந்தக் காலத்தில் சென்னை பல்கலைக்கழகம் மட்டும்தான் இருந்தது. நீதிக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சென்னைக்கு வெளியே சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
இன்றைய தினம் தமிழ்நாட்டில் மாநில அரசு சார்பாக 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு உயர்கல்வியில் சிறந்து விளங்குவதை நீங்கள் அறிவீர்கள். இந்தியாவின் தலை சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன. தலை சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 தமிழ்நாட்டில்தான் உள்ளன. தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில்தான் உள்ளன. தலை சிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 32 தமிழகத்தில் உள்ளன. தலைசிறந்த 100 மருத்துவக்கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் உள்ளன. 30 சட்டக் கல்லூரியில் 2 தமிழ்நாட்டில் உள்ளன. இப்படி பட்டியலை நாம் அடுக்கிக்கொண்டு போக முடியும். ஏனென்றால் கல்வியில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. யாராலும் பறிக்க முடியாத சொத்து கல்விதான்” என்றார்.