சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தமிழ்மணி என்பவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், “விஷச் சாராயத்தால் பாதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன் மலையும் ஒரு பகுதியாகும். இந்த கல்வராயன் மலைப்பகுதி இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி முன்னேறாமல் உள்ளது. இது தொடர்பாக கடந்த 20 ஆண்டுகளாக அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நேர்காணலை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமனியம் பார்த்துள்ளார். இதனையடுத்து நீதிபதி எஸ்.எம். சுப்ரமனியம் தாமாக முன்வந்து இது தொடர்பாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதி மன்றத்தில் கடந்த ஒரு மாத காலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமனிடம், ‘கடந்த 1991 ஆம் ஆண்டு ஆண்டு தான் கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திரமடைந்த பிறகும் கூட கல்வராயன் மலையில் வசிக்கும் மக்களை இந்தியாவுடன் இணைக்காமல் தனிப்பகுதியாக இருந்து வந்தது. இது ஒரு கொடுமையான சம்பவம் ஆகும். அங்கு எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லை. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி எஸ்.எம். சுப்ரமனியம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமனியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் இன்று (24.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “இந்த வழக்கில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் வேண்டும்” என கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதிகள், “கல்வராயன் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டீர்களா. அங்கு என்ன நடக்கிறது. அரசு அதிகாரிகள் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிபதிகளாகிய நாங்கள் சென்று பார்வையிட்டால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியாது.
எனவே கல்வராயன் மலைப்பகுதிக்குச் சென்று மக்களின் நிலை பற்றி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்ய வேண்டும். முதலமைச்சர் செல்லமுடியாவிட்டால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சம்பந்தப்பட்ட துறை அமைச்சருடன் செல்ல வேண்டும். அவ்வாறு பார்வையிட்டால் தான் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, ரேசன் கடைகளை விரைந்து ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.