சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் கிராமத்தையொட்டி ஓடும் பழைய கொள்ளிடம் ஆற்றில் ஊர் பொதுமக்கள் ஆற்றில் இறங்கிக் குளிக்கும் இடத்தில் முதலைகள் பொதுமக்களைத் தாக்காமல் இருக்கும் வகையில் வனத்துறை சார்பில் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு கூண்டில் சனிக்கிழமையன்று பெரிய முதலை ஒன்று புகுந்துள்ளதாகச் சிதம்பரம் வனத்துறையினருக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன் பெயரில் சிதம்பரம் வன பிரிவு அலுவலர் பன்னீர்செல்வம், சிதம்பரம் வனக்காப்பாளர் அன்புமணி, புவனகிரி ஞானசேகர், வனக்காப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று பொதுமக்கள் உதவியுடன் இரும்பு கூண்டிலிருந்த 12 அடி நீளம் 400 கிலோ எடை மதிக்கத்தக்க முதலையை லாவகமாக வலை வீசி பிடித்தனர்.
பின்னர் முதலையைச் சரக்கு வாகனம் மூலம் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கொள்ளிடம் மற்றும் பழைய கொள்ளிடம் ஆறுகளில் முதலைகள் அதிகமாகத் தஞ்சம் அடைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாலை நேரங்களில் வேலையை முடித்துக் கொண்டு ஆற்றில் இறங்கிக் குளிக்கும் போது, கை, கால்களைக் கழுவும் போதும் முதலை கடித்துப் பல பேர் உயிரிழந்துள்ளனர். கை, கால்களை இழந்து சிகிச்சை பெற்றவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் இந்த பகுதியில் பிடிக்கப்படும் முதலையைக் கொண்டு முதலை பண்ணை அமைத்து அதனை பராமரிக்க வேண்டும். மழை மற்றும் வெள்ள காலங்களில் முதலை குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே வராமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.