தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18-12-2023) கோயம்புத்தூரில் தொடங்கி வைப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை கோவையில் இன்று (18-12-23) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், “சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 4ஆம் தேதி புயலோடு கூடிய பெரும் மழை பெய்தது. அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மழைக்கு பிறகு போர்க்கால அடிப்படையிலும் தமிழக அரசு செயல்பட்டு எதிர்கொண்டது. மழை நின்றதும் நிவாரணப் பணிகளையும் தொடங்கினோம். மறுநாள் காலையில், முக்கிய சாலைகளில் உள்ள போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் மூன்று நாட்களில் மின் இணைப்பு உடனடியாக கிடைத்தது.
புறநகர் பகுதிகளில் 4, 5 நாட்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியது. அந்த மாவட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு அதனை மக்களிடம் கொண்டு சென்றோம். இதற்கிடையில், இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். சென்னையில் செயல்பட்டதை போல் அதன் அனுபவத்தை கொண்டு, இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென்மாவட்ட மக்களை காப்பதற்கு உறுதியளிப்போம்” என்று கூறினார்.