![Chief Minister M.K.StalIN pays homage to the body of Kodiyeri Balakrishnan!](http://image.nakkheeran.in/cdn/farfuture/O3to710Gvh9i81ZlGYc8HdbB4BguJrTsljszh_sjYTw/1664645472/sites/default/files/inline-images/mksa323.jpg)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணன் (வயது 68) புற்றுநோய் காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இன்று (01/10/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் கருத்தரங்கில் கலந்து கொண்டு, விமானம் மூலம் சென்னைக்கு திரும்பிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் மறைவு செய்தியை அறிந்தார்.
இதையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடியேரி பாலகிருஷ்ணனின் உடலுக்கு மாலை வைத்து மரியாதைச் செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் மற்றும் மூன்று முறை கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகப் பதவி வகித்து வந்த கொடியேரி பாலகிருஷ்ணனுக்கு எனது இறுதி மரியாதையைச் செலுத்தினேன்.
தோழர். கொடியேரி ஒரு கட்டுக்கடங்காத ஆளுமை மற்றும் 1975- ல் அவசரநிலையின் போது மிசாவின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கும், சிபிஎம் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.