Skip to main content

முதல்வர் மு.க.ஸ்டாலின் - இ.பி.எஸ். விவாதம்; சட்டமன்றத்தில் சுவாரஸ்யம்! 

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Chief Minister M.K.Stalin - EPS Debate! Interesting in the legislature!

 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று (09.10.2023) காலை 10 மணிக்கு கூடியது. தொடர்ந்து கேள்வி, பதில் விவாதம் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான உரையை தமிழக முதல்வர் தொடங்கினார்.

 

அதனைத் தொடர்ந்து தனித் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்பொழுது; 

 

Chief Minister M.K.Stalin - EPS Debate! Interesting in the legislature!

 

எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., “திமுகவைச் சேர்ந்த 38 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இருக்கிறார்கள். ஏன் அவர்கள் இந்த காவிரி பிரச்சனை குறித்து அங்கு பேசவில்லை”

 

முதல்வர் மு.க.ஸ்டாலின், “காவிரி பிரச்சனை குறித்து திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிடுகிறார். நாங்கள் பேசியதை நிரூபிக்கவா? இங்கு ஆதாரம் இல்லாமல் இல்லாததையும் பொல்லாததையும் எல்லாம் சொல்லக்கூடாது. சட்டமன்றத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இப்படிப் பேசுவது தான் மரபா?”

 

எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., “நம் உரிமைகளை காப்பதற்காக நான் பேசிக்கொண்டிருக்கிறேன். சும்மா பேசிவிட்டால் மட்டும் போதுமா, 38 பேர் இணைந்து அவையை ஒத்திவைக்கலாம் இல்லையா? அப்படி அழுத்தம் கொடுத்ததன் காரணமாகத்தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல காலதாமதம் செய்ததன் காரணமாக மத்திய அரசு மீது நாங்கள் அவமதிப்பு வழக்கைத் துணிச்சலோடு தொடர்ந்தோம். அந்தத் துணிச்சல் உங்களிடத்தில் காணவில்லையே?” 

 

Chief Minister M.K.Stalin - EPS Debate! Interesting in the legislature!

 

முதல்வர் மு.க.ஸ்டாலின், “துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார். அப்போது திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி ஆராவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய அவர், “என்னத் துணிச்சல் என்பது எங்களுக்கு தெரியும். அதன் காரணமாக இதனை எல்லாம் இந்த அவையில் சொல்லி மரபை மீற வேண்டிய அவசியம் இல்லை. பல முறை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளோம். அதுமட்டுமல்லாமல், பல முறை அவையே நடக்கமுடியாதபடி செய்துள்ளோம். இதனை நான் நிரூபிக்க தயாராக இருக்கிறேன். அனைத்திற்கும் ஆதாரங்கள் இருக்கிறது. சட்டமன்றத்தில் இது (தீர்மானம்) நிறைவேற வேண்டும் என்பதற்காக நாங்கள் அமைதியாக இருப்பதால்; எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என கருதுகிறாரா?” 

 

எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., “நாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு”

 

முதல்வர் மு.க.ஸ்டாலின், “இது வரை பேசியபோது நான் குறுக்கிட்டேனா? தவறான தகவலைச் சொல்லும்போதுதான் தவறு என நான் மறுக்கிறேன். உங்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. இங்கு இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள உரிமைகளை தடுக்கவும் விரும்பவில்லை. அதில் தலையிடுவதும் மரபல்ல. ஆனால், தவறான கருத்துகளை இங்கு பதிவு செய்யும்போது அதனை மறுப்பது என்பது என் கடமை. 

 

எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., “அதிகமான அழுத்தம் கொடுத்தால் தான் இந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் அதனைத் தான் நான் வலியுறுத்துகிறேன். காவிரி பிரச்சனை வந்தபோது, அதிமுக 22 நாட்கள் நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்ததின் காரணமாக அதில் மத்திய அரசு ஒரு தீர்வை கண்டது. அதுபோல், நீங்கள் செயல்படுத்த வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கிறேன். இதில் ஒரு தவறும் இல்லை” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்