திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் வண்ணாந்துறை கிராமத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார் தீபா. ஆந்திர மாநிலம் மல்லானூர் அடுத்த அடவி பூதலூர் கிராமத்தில் வசிக்கும் தீபாவின் தாய் 45 வயதான ஈஸ்வரி. கணவர் மாணிக்கம் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் மகளை பார்ப்பதற்காக தீபா வீட்டிற்கு வந்துள்ளார் ஈஸ்வரி .
தீபா தனது வயலில் கேழ்வரகு பயிர் செய்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக அதிகமாக காற்றுடன் கோடை மழை பெய்வதால் கேழ்வரகு கீழே சாய்கிறது என்பதால் அறுவடை செய்ய முடிவு செய்து ஈஸ்வரி மே 10 ஆம் தேதி காலை வயலுக்கு சென்றுள்ளார். 'நான் முன்னாடி காட்டுக்கு போறன் நீ பிறகு வா' என சொல்லிவிட்டு வந்துள்ளார்.
இரவு சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் அந்தவழியாகச் சென்ற மின்கம்பத்திலிருந்து மின்சாரக் கம்பி அறுந்து வயல்வெளியில் விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் நிலத்தில் இறங்கிய ஈஸ்வரி மின்கம்பியை மிதித்த நிலையில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து நீண்ட நேரமாகியும் தாயை காணததால் தீபா சென்று பார்த்தபோது, தன்னுடைய தாய் ஈஸ்வரி வயலில் விழுந்துக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தீபா அவரை தூக்க முற்பட்டார். அப்பொழுது தீபா மீதும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியுள்ளது. தீபாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மின்சாரத்தைத் துண்டித்து தீபாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதுக்குறித்த தகவல் ஆம்பூர் நகர காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் இறந்த ஈஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.