![chief minister mkstalin inspection with salem, covai, tiruppur districts](http://image.nakkheeran.in/cdn/farfuture/K9nq0nFFmlE7t2T6zCSxQgiNsxpBwLvxKtLKWMpzfG0/1621480030/sites/default/files/inline-images/mkii_2.jpg)
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் ஆகியவற்றை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
குறிப்பாக, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரோனா தடுப்பு குறித்து சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று (20/05/2021) முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார். பின்னர் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நாளை (21/05/2021) ஆய்வு செய்கிறார்.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் இன்று (20/05/2021) முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக நேரடியாக மாவட்டங்களுக்குச் சென்று முதல்வர் ஆய்வு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கரோனா தடுப்பு குறித்து மாவட்டங்களில் நேரில் ஆய்வுசெய்ய சென்னை இல்லத்திலிருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் புறப்பட்டார். சென்னை விமான நிலையம் செல்லும் முதல்வர், அங்கிருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார்.