தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (26-11-24) அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (27-11-24) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழ்நாட்டை நோக்கி நகரும் என்பதால், சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ''தொடர்ந்து மழை நிலவரத்தை அரசாங்கம் கவனித்துக் கொண்டிருக்கிறது. கண்காணிப்பில் வைத்துக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட சென்றுள்ளார். துரிதகதியில் எல்லா விதமான நடவடிக்கைகளும் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இந்த அரசாங்கம் உருவாக்கி தரும்.
நேற்றிலிருந்து இன்றைக்கு காலை வரை எவ்வளவு மழை பெய்து இருக்கிறது என்பதையும்; அந்த மழையின் அளவுக்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்கிறோமா என்பதையும்; பொதுமக்களை தங்க வைப்பதற்கு சரியான இடங்கள் தயார் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதையும்; அவர்களுக்கு வேண்டிய உணவு பால் போன்றவை தயாராக இருக்கிறதா என்பதை எல்லாம் மாவட்ட ஆட்சியர்களிடமும் தமிழக முதல்வரின் நேரடியாக கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார். அதோடு மட்டுமல்லாது தயாராக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு
எச்சரிக்கையும் கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர் கனமழையால் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய இழப்பை தமிழக அரசு வழங்கும்'' என்றார்.