திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் ஒட்டன்சத்திரம் கே.ஆர். மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி கூடுதல் ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றுக் கொண்டனர். அதன் பின் பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழக முதல்வர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றைச் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன் விளைவாக தமிழகம் முழுவதும் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தியுள்ளார்.
இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் படிக்கின்ற காலத்தில் போதைக்கு அடிமையாவதை தடுக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. மாணவர்கள் மட்டுமின்றி நண்பர்கள், உறவினர்களிடையே போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள் இளைஞர்கள். தமிழ்நாடு போதைப் பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். வெளிநாடுகள் வெளிமாநிலங்களிலிருந்து போதைப் பொருட்கள் பல்வேறு வடிவங்களில் தமிழகத்தில் விற்பனையாகிறது. அவற்றை ஒழிக்க இந்த 2 நிமிட உறுதிமொழி எடுப்பதோடு நாம் இருந்துவிடக் கூடாது. போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
தமிழக முதல்வர் மாணவ மாணவிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசுப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட தொழில் பிரிவு பாடங்களில் படிக்க 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் காரணமாக தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகள் சேர்க்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நபார்டு திட்டத்தில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அது போல், மாணவ மாணவிகள் உயர்கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வி மேம்பாட்டிற்காக 4 அரசு கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டன் சத்திரத்தில் ஒரு தொழிற்பயிற்சி நிலையம் அமையவுள்ளது. இங்கு பல்வேறு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படும். இதன்மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க அறிவித்து அதற்கான உணவுப் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். மாணவ பருவம் மிகவும் முக்கியமான பருவம். மாணவ மாணவிகள் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேறி பெற்றோருக்கும் பள்ளிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன் ராஜ், ஒட்டன்சத்திரம் நகராட்சி துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் அய்யம்மாள் உள்பட பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.