வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை நடப்பு பிப்ரவரி மாதத்தில் திடீரென்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சேலத்தில் சமையல் காஸ் சிலிண்டர் விலை 753 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, சந்தைத்தேவை, நுகர்வுத்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வீட்டு உபயோக மற்றும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலைகள் மாதந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு விலை நிர்ணயம் செய்கிறது.
மாதந்தோறும் 1- ஆம் தேதி முதல் புதிய விலை அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜன. 31- ஆம் தேதி நடப்பு பிப்ரவரி மாதத்திற்கான வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை மட்டும் 191 ரூபாய் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை, கடைசியாக கடந்த டிசம்பர் 1- ஆம் தேதி 50 ரூபாயும், 15- ஆம் தேதி 50 ரூபாயும் என ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் அதிருப்தி கிளம்பிய நிலையில், ஜனவரி மாதம் இவ்வகை காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. பிப்ரவரி 1- ஆம் தேதியன்றும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படாததால் நுகர்வோர் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் திடீரென்று வியாழக்கிழமை (பிப். 4) வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை 25 ரூபாய் உயர்த்தி இருக்கிறது, எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு. இதனால் சென்னையில் மானியமில்லா வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 735 ரூபாயாகவும், சேலத்தில் 753 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் 719 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 745.50 ஆகவும் உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தரப்பில் கேட்டபோது, ''கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருப்பதால் விலை உயர்த்தப்பட்டு இருக்கலாம். வரும் மாதங்களிலும் தொடர்ந்து காஸ் சிலிண்டர் விலை உயர வாய்ப்புள்ளது'' என்றனர்.