கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் கனகசபையில் சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வழிபடச் சென்றார். அப்போது அங்குள்ள தீட்சிதர்கள் அப்பெண்ணை வழிமறித்து சாதி பெயரை கூறித் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்து இரண்டு வார காலத்திற்கு மேல் ஆகியும் இன்றுவரை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை காவல்துறை. தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தியும், காவல்துறை இதுவரை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சம்பந்தப்பட்ட தீட்சிதர்களை கைது செய்ய வலியுறுத்தியும், நடராஜர் கோவிலை தனிச்சட்டம் இயற்றி இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்றும், கோயில் கனகசபையில் அனைவரும் எந்த பாகுபாடும் இல்லாமல் இலவசமாக தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, அவர்கள் வடக்கு வீதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி பேரணியாக வந்தனர். சிறிது தூரம் வந்தவர்களை சிதம்பரம் காவல்துறை டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி அனுமதி இல்லை என கூறினர். உடனே அவர்கள் தரையில் அமர்ந்து காவல்துறையையும், தீட்சிதர்களையும் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்டச் செயலாளர் துரை, துணை செயலாளர் குளோப், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 150- க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்தனர். இதனால் வடக்கு வீதி பகுதியில் போக்குவரத்து தடைச் செய்யப்பட்டது.
போராட்டம் காரணமாக, அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.