சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.
மார்கழி மாதத்திற்கான ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாவிற்கு கடந்த 28-ஆம் தேதி கோவிலில் கொடியேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் தினமும் இரவு நேரத்தில் நகரின் முக்கிய வீதிகளில் சாமி சிலைகள் ஊர்வலம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு கீழ வீதியில் இருந்து ஆருத்ரா தேர் திருவிழாவுக்கான தேரோட்டம் நடைபெற்றது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன், விநாயகர், சண்டிகேஸ்வரர் தேர்கள் நகரின் முக்கிய வீதியான கீழ வீதியில் தொடங்கிய தேரோட்டம்., தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் இன்று மாலை நிலைக்கு வந்தடையும்.
இதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் தேரில் இருந்து நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளை இறக்கி மேள தாளம் முழங்க ஆயிரங்கால் மண்டபத்திற்கு எடுத்துச் செல்வார்கள். பின்னர் வியாழன் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் லட்சார்ச்சனை மற்றும் அதிகாலையில் மகா அபிஷேகம் நடைபெறும். இதனையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 3 மணியிலிருந்து 4 மணிக்குள் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதில் கலந்துகொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருவார்கள்.
தேர் மற்றும் தரிசன விழாவில் எந்த அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.