சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மற்ற அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தையே இந்தக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி, இன்றுடன் 49வது நாளாக பல்வேறு நூதன முறையில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் கல்லூரி விடுதியில் மின்சாரம், குடிநீர், உணவு என அனைத்தையும் தடை செய்தது. இதையடுத்து கடந்த 25-ம் தேதி சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
மாணவர்கள் இரவு பகல் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வெளியில் ஏற்பாடு செய்யும் உணவுகளைப் போராட்டக் களத்தில் உண்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ‘சிதம்பர ரகசியம், நடராஜர் கோவிலில் உள்ளது. நாங்கள் சிதம்பர ரகசியம்2ஐ குடியரசு தினத்தில் (26 ஜன.) வெளியிடுவோம்’ என்று அறிவித்து, இதுகுறித்த போஸ்டர்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டன.
நேற்று (26.01.2021) போராட்டக் களத்தில் மாணவர்கள் அரசிதழை ஆதரமாக கொண்டு, ‘தமிழக அரசு கடந்த 2014 ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ரூ. 2075 கோடி நிதியை இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அளித்துள்ளது. 2019-20 கல்வி ஆண்டில் மட்டும் ரூ.1044 கோடியைக் கொடுத்துள்ளது. இதற்கான கணக்குகள் இல்லை. மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் இது அரசு கல்லூரி என்றுதான் அனுமதி வாங்கியுள்ளனர். இது சுயநிதி கல்லூரி என்று அனுமதி வாங்கவில்லை. இதற்கான ஆதார கடிதம் அரசிதழில் உள்ளது.
இவர்களாகவே இது சுயநிதி கல்லூரி என்று பொதுமக்கள் உள்ளிட்ட ஏழை மாணவர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். அப்படியே சுயநிதி கல்லூரி என்றால் அரசு ஏன் இவ்வளவு பணம் ஒதுக்க வேண்டும்? இவ்வளவு பணம் ஒதுக்கியும் ஏழை பொதுமக்கள் மருத்துவம் பார்க்க மருத்துவமனைக்கு வரும்போது, அவர்களிடம் பல ஆயிரம் ரூபாய்கள் வாங்கப்படுகிறது. இந்தப் பணம் எல்லாம் எங்கே போகிறது?’ என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ‘யாரோ ஒருவர் செய்த தவறுக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலிகடாவா?’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக ஏழை மாணவர்கள் இதுபோன்ற அரசு கல்லூரியில் பணம் கட்டி கல்வி பயின்று பாதிக்கப்பட்ட நிகழ்வை, கருப்பு உடைகள் அணிந்துகொண்டு முகத்தில் சாயம் பூசிக்கொண்டு போராட்டக் களத்தில் நாடகம் மற்றும் பாடல்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அனைவரும் வரவேற்று நாடகம் நடத்திய அனைத்து மாணவர்களுக்கும் எழுந்து நின்று கை தட்டி நன்றியை தெரிவித்துக்கொண்டனர். மாணவர்கள் தாங்கள் வெளியிட்ட பட்டியலையே சிதம்பரம் ரகசியம் 2 என்றனர்.