ஏப்ரல் -3ம் தேதி நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்தில் பால் முகவர்கள் சங்கம் திட்டமிட்டபடி பங்கேற்கும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் அறிக்கை:
’’காவேரி விவகாரத்தில் ஆறு வார காலத்தில் "காவேரி மேலாண்மை வாரியம்" அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு அமுல்படுத்தாமல் காலம் தாழ்த்தி தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் வருகின்ற ஏப்ரல் -3ம் தேதி தமிழகத்தில் மாநிலம் தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
இந்த சூழ்நிலையில் இன்று காலை சென்னையில் அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்திய திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் -5ம் தேதி தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
மேலும் இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்த "தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை" தலைவர் த.வெள்ளையன் ஏப்ரல் -11ம் தேதி தமிழகத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
திமுக மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை அறிவித்துள்ள இந்த முழு கடையடைப்பு போராட்டமானது வணிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி ஏப்ரல் -3ம் தேதி நடைபெற இருக்கும் போராட்டத்தை நீர்த்துப் போக செய்யும் நடவடிக்கையாக அமைந்து போவதோடு மத்தியில் ஆளுகின்ற பாஜகவுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்தி விடும்.
"ஒரு சிங்கத்தை நான்கு பசுக்கள் ஒன்று சேர்ந்து முட்டி துரத்திய போது குள்ளநரி ஒன்றின் சூழ்ச்சியால் தனித்தனியாக பிரிந்த நான்கு பசுக்களும் இறுதியில் அந்த சிங்கத்தின் பசிக்கு இரையாகிப் போன கதை"யை நாம் ஆரம்ப பள்ளியிலேயே படித்திருக்கிறோம்.
அந்த வகையில் மத்தியில் ஆளுகின்ற பாஜகவின் குள்ளநரித்தனத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவையும் தெரிந்தோ, தெரியாமலோ துணை போய் தமிழர்களுடைய போராட்டத்தின் வீரியத்தை குறைத்து விட வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
எனவே தமிழகத்தில் வரும் ஏப்ரல் -3ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டம் மற்றும் விவசாய பெருமக்களின் அறவழிப் போராட்டங்கள் வெற்றி பெற திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை ஈகோ பாராமல் அறிவித்துள்ள தங்களின் போராட்ட அறிவிப்பை ஏப்ரல் -3ம் தேதிக்கு மாற்றி அமைத்து ஒன்றுபட்ட தமிழர்களின் ஒற்றுமையை வீரியத்தோடு டெல்லிக்கு எடுத்துரைக்க வேண்டுகிறோம்.
"கட்சிகள், அமைப்புகள் என பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்து இழப்பதை விட, தமிழர்களாக இணைந்திருந்து சாதிப்போம்" என்பதை வலியுறுத்தி ஏப்ரல் -3ம் தேதி நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் திட்டமிட்டபடி பங்கேற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.’’