![Chicken shop Owner - Thanjavur - incident - police investigation -](http://image.nakkheeran.in/cdn/farfuture/ASJXZ6OSsLbzGT6mQZLcXt36EOxPZOzedh6TI99YxuE/1594007118/sites/default/files/inline-images/Chicken%20shop.jpg)
கரோனா பொதுமுடக்க வேலையிலும் தஞ்சை மாவட்டத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடப்பது பொதுமக்களைக் கவலைப்பட வைத்துள்ளது. அந்த வகையில் பாபநாசம் அருகே கோழி இறைச்சிக் கடை வியாபாரி ஒருவரை அரிவாளால் வெட்டி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
பாபநாசம் அடுத்துள்ள அம்மாபேட்டை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மகன் உதயக்குமார். இவர் அம்மாபேட்டை சந்தைப்பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்தார். வழக்கம்போல் சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் செல்ல வெளியே வந்தவரை இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சூழ்ந்து அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
பலத்த காயமடைந்த உதயகுமாரை, அங்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலை குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தக் கொலை தொழில் போட்டி காரணமாக நடந்ததா? முன்விரோதமா அல்லது வேறு ஏதாவது காரனமா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் ஆயுள்தண்டனை முடிந்து வீட்டில் இருந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதே போல ஒய்வுபெற்ற ஆசிரியரும் மடத்தின் மேலாளருமான ஒருவர் பி.ஜே.பி. நகர தலைவரால் கொலை செய்யப்பட்டார். தற்போது கோழிக்கடைக்காரர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படித் தொடர் கொலையால் தஞ்சை மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.