சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமிய அமைப்பினர் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து பாளையங்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதுபோன்று மேலப்பாளையத்தில் 2500 கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நேற்று முன்தினம் (14/02/2020) தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தவ்ஹீத் ஜமாத் மாநில துணைத்தலைவர் சுலைமான் தலைமையில் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் பெண்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதனையொட்டி பகுதியில் 2500- க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தில் பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.