
நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் கலைக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று 2022 - 2023 ஆம் நிதியாண்டில் சட்டப்பேரவையின் மானியக் கோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டது.
சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெறும் ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிவு செய்து மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியின் தலைமையில் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் மற்றும் நெய்தல் கலைத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்திலும், கொரோனா பதிப்பாலும் இந்த விழா பெரிய அளவில் கவனம் பெறாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது கடந்த ஆண்டு நடைபெற்ற சென்னை சங்கமம் விழா பெருமளவில் பேசப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் கனிமொழி தலைமையில் பொங்கலை முன்னிட்டு சென்னை சங்கமம் விழா நடைபெறவிருக்கிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழாவை தீவுத்திடலில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சி ஜனவரி 13 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. கலை நிகழ்ச்சியுடன் சேர்த்து உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். வழக்கம்போல் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்" என்றார்.