
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. அதேபோல் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘ஓ மை கடவுளே’ படமும் இளைஞர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் பிரதீப்பும் அஷ்வத்தும் இணைந்த ‘டிராகன்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்த எதிர்பார்ப்பை தற்போது பூர்த்தி செய்ததா, இல்லையா?
இன்ஜினியரிங் மாணவரான பிரதீப் ரங்கநாதன் 48 அரியர்ஸ் உடன் கல்லூரியில் இருந்து பிரின்ஸ்பல் மிஷ்கினால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனால் அவரது நீண்ட நாள் காதலியான அனுபமா பரமேஸ்வரன் அவரை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்து போன பிரதீப் ரங்கநாதன் தன் காதலியின் கணவனை விட தான் ஒரு ரூபாய் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என எண்ணி போர்ஜரி செய்து போலி டிகிரி சான்றிதழ் வாங்கி ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து குறுக்கு வழியில் பணக்காரர் ஆகிறார். இதற்கிடையே அவருக்கு பெண் பார்க்கப்படுகிறது. மணப்பெண்ணாக வரும் கயாடு லோஹர் பிரதீப் ரங்கநாதன் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது.

இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கல்லூரி முதல்வர் மிஷ்கின் பிரதிப் ரங்கநாதன் செய்த போர்ஜெரியை கண்டுபிடித்து விடுகிறார். இவர் கண்டுபிடித்த உண்மைகளை பிரதீப் ரங்கநாதன் கம்பெனியிலும் மற்றும் அவரது மாமனாரிடமும் கூறி மாட்டி விடாமல் இருக்க பிரதிப் ரங்கநாதனுக்கு வாழ்க்கையில் திருந்த இன்னொரு ஒரு டாஸ்க் ஒன்றை கொடுக்கிறார். அதாவது கல்லூரியில் வைத்த 48 அரியர்சை அவர் மீண்டும் ஒரே செமஸ்டரில் கிளியர் செய்து விட்டால் இந்த குற்றத்திலிருந்து காப்பாற்றுவதாக கூறுகிறார். இதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் பரிட்சையில் பாஸ் ஆனாரா, இல்லையா? இவர் செய்த போர்ஜரி அம்பலமானதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
நாம் ஏற்கனவே பார்த்து பழகிய வழக்கமான கல்லூரி கால நண்பர்கள் கதையாக ஆரம்பிக்கும் திரைப்படம் போகப்போக வழக்கமான காட்சிகளே படம் முழுவதும் படர்ந்து இருந்தாலும் வேகமான திரை கதையாலும், பிரஷான காட்சிகளாலும் மற்றவை எல்லாம் மறக்கடிக்கப்பட செய்து தியேட்டரில் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. முதல் பாதி ஆரம்பித்து வழக்கமான கல்லூரி கால காட்சிகள், காதல், ஏமாற்றம், வேலை போன்ற கிளிஷேவான காட்சிகளால் திரைக்கதை நகர்ந்து போகப் போக காட்சிகள் சுவாரசியமாக மாறி அப்படியே வேகம் எடுத்து இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் பயணித்து இறுதி கட்டத்தில் பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்து இவர்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் படமாக இந்த டிராகன் படம் அமைந்திருக்கிறது.

இந்த கால மாணவர்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி அவர்களுக்கு இன்றைய ட்ரெண்டில் என்னவெல்லாம் பிடிக்குமோ அதை இந்த படத்தில் அப்படியே கொடுத்து பாஸ் மார்க் வாங்கி படத்தையும் கரை சேர்த்து இருக்கிறார் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து. படத்தில் ஆங்காங்கே பலவிதமான லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும், அதேபோல் கமர்சியல் காட்சிகளுக்காக சில பல காம்ப்ரமைஸ்கள் செய்திருந்தாலும், ஏற்கனவே பார்த்து பழகிய காட்சிகளாகவே இருந்திருந்தாலும் அனைத்துமே படம் பார்ப்பவர்களுக்கு ரசிக்கும்படியாக அமைத்துவிட்டது. அதற்கேற்றார் போல் இக்கால இளைஞர்களுக்கு ஏற்ற நல்ல மெசேஜையும் படத்தில் வைத்து பார்ப்பவர்களுக்கு ஒரு பீல் குட் வாழ்க்கை பாடமாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
படிப்பு என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் கல்லூரியில் இருக்கும் கெத்து கல்லூரி முடித்த பின் எங்கே செல்கிறது, கல்லூரிக்குள் இருக்கும் பொழுது இருக்கும் மரியாதை வெளியே சென்ற பிறகு என்ன ஆகிறது, இந்த மாதிரியான விஷயங்களை எப்படி கையாள வேண்டும், வாழ்க்கையில் எந்த நேரத்தில் முன்னேற வேண்டும், படிப்பு குடும்பம் ஆகியவை எந்த அளவுக்கு மாணவர்களுக்கு முக்கியம் போன்ற நல்ல விஷயங்களை படம் முழுவதும் நட்பு, காதல், ஏமாற்றம், அழுகை, சிரிப்பு போன்ற விஷயங்கள் மூலம் கொடுத்து ஆங்காங்கே சில இடங்களில் அயற்சி இருந்தாலும் மனதிற்கு நெருக்கமான காட்சி அமைப்புகளால் அவை மறக்கடிக்கப்பட செய்து சிலிர்த்து சில்லறையை விடும்படியான படமாக இந்த டிராகன் அமைந்திருக்கிறது.

லவ் டுடேவில் எங்கு விட்டாரோ அதே இடத்தில் இருந்து அதகலப்படுத்தி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த கால இளைஞர்களின் பல்சை கரெக்டாக பிடித்துக் கொண்ட அவர் அதற்கேற்றார் போல் காட்சி அமைப்புகளும் அவரது உடல் மொழியும் நடிப்பும் ஆகியவை சிறப்பாக அமைந்து தியேட்டர் மொமென்ட்ஸ்களால் கைத்தட்டல்களை உருவாக்கி கவனம் பெற்று இருக்கிறார். காட்சிக்கு காட்சி தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி படத்திற்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். வழக்கமான நாயகியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் கயாடு லோஹர் மிகவும் அழகாக இருக்கிறார், அளவாக நடிக்கிறார், சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார்.
நட்புகளாக வரும் வி.ஜே. சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் எந்த எந்த இடங்களில் எல்லாம் சிரிக்க வைக்க முடியுமோ அந்தந்த இடங்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து ரசிக்க வைத்திருக்கின்றனர். தந்தை கதாபாத்திரத்தில் வரும் ஜார்ஜ் மரியான் படம் முழுவதும் தனது குணச்சித்திர நடிப்பால் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக இறுதி கட்ட காட்சிகளில் பார்ப்பவர்களை கண்ணீர் வர அளவுக்கு கலங்கடிக்க செய்து படத்தையும் கரை சேர்க்க தூணாய் நிற்கிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் கௌதம் வாசுதேவ் மேனன், கே எஸ் ரவிக்குமார், பி எல் தேனப்பன் உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கின்றனர். கல்லூரி முதல்வராக வரும் மிஷ்கின் ஆரம்பத்தில் மிரட்டி போக போக பார்ப்பவர்களுக்கு கனத்த இதயத்தை கொடுக்கும்படியான நடிப்பை கொடுத்து நெகிழ்ச்சி அடைய வைக்கிறார். இவருக்கும் பிரதீப்புக்குமான காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார்.

லியோன் ஜேம்ஸ் இசையில் வழித்துணை பாடல் ஹிட் ரகம். பின்னணி இசையில் இக்கால இளசுகளுக்கு ஏற்றவாறு துள்ளலான இசையை சிறப்பாக கொடுத்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறார். நிக்கேத் பொம்மியின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டம். குறிப்பாக கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகளும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு கலர்ஃபுல்லாக தெரிகிறது. யூத்துகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஃபிரேமையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்.
கல்லூரியில் இருக்கும் கெத்தான விஷயங்கள் எப்படி நிதர்சன வாழ்க்கைக்குள் செல்லும் பொழுது மாறி இந்த உலகம் நம்மை எப்படி வரவேற்கிறது என்ற உண்மையை நெத்திப்பொட்டில் அடித்தது போல் கூறி அதனுள் நட்பு பாசம் காதல் ஏமாற்றம் அழுகை வெற்றி தியாகம் போன்றவைகளை இக்கால சோசியல் மீடியா டிரெண்டுடன் கொடுத்து ஆங்காங்கே பல இடங்களில் அயற்சி ஏற்படும் படியாகவே இருந்தாலும் அதை அழுத்தமான காட்சிகளால் முக்கியமான உணர்வுகளை பார்ப்பவர்களுக்குள் கடத்தி பார்க்கும் அனைவருக்கும் பிடிக்கும் படியான பீல் குட் காலேஜ் படமாக இந்த டிராகன் அமைந்திருக்கிறார்.
டிராகன் - டைனமைட்!