கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து அரசு பேருந்துகளையும், தனியார் பேருந்துகளையும் தினமும் சுத்தம் செய்யச் சொல்லி இருக்கோம். பணிமனையில் பஸ்சை எடுக்கும்போது மாஸ்க் (முகக் கவசம்) வழங்கச் சொல்லியிருக்கோம். பேருந்து நிலையங்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கை கழுவ சானிடைசர் வைக்கச் சொல்லியிருக்கோம்" என்றார்.
நிலைமை எப்படி இருக்கிறது என சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை கொஞ்சம் எட்டிப் பார்த்தோம். நேரக்காப்பாளர் டேபிளில் மஞ்சள், உப்பு கலந்த தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கையை நனைத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதையே அத்தனை ஓட்டுநர், நடத்துநர்களும் கடைப்பிடிக்கின்றனர். தலைநகர் கோயம்பேடு நிலையத்திலேயே இப்படின்னா? மற்ற பேருந்து நிலையங்களில் சொல்லவா வேண்டும்.?
உப்பும், மஞ்சளும் கிருமி நாசினிதான் அதற்காக ஒரே டப்பாவுக்குள் அத்தனை பேரும் கையை நனைத்துச் சென்றால், ஒருவர் மூலம் மற்றவருக்கு கிருமி தொற்று பரவும்னு யோசிக்க மாட்டீங்ளா ஆபிசர்ஸ்..? வழக்கமாக டீசலத்தான் சிக்கனம் பிடிக்கச் சொல்வீங்க.... சானிடைசர் வாங்காமல் இதிலுமா சிக்கனம் பிடிப்பது? என்று புலம்புகின்றனர் போக்குவரத்து தொழிலாளர்கள்.