தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,210 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாகச் சென்னையில் 767 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா பாதிப்பால் சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊரான செந்துறை அருகே நம்மங்குணத்துக்கு கூலித் தொழிலாளி சென்ற நிலையில், அவருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இவருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்த துங்கபுரம் ஆரம்பச் சுகாதாரப் பணியாளருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் காய்கறி மார்க்கெட்டில் சில நாட்களாகப் பணியாற்றி வந்த கோயம்பேடு எஸ்.ஐ ஒருவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் கரோனா இருப்பது உறுதியானது. கரோனா உறுதியானதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோயம்பேடு எஸ்.ஐ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை அடுத்த மாங்காடு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும் கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இவர் உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரின் மனைவி, இரண்டு மகன்கள் உட்பட 20 பேருக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.