முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் விடுப்பு (பரோல்) வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில், இந்த வழக்கு, விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, விடுப்பு (பரோல்) மனுவை ஏற்கனவே நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன.
அற்புதம்மாள் தரப்பில், விடுதலை செய்ய முடிவெடுத்த அரசு, பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், விடுதலை செய்ய முடிவெடுத்ததும், விடுப்பு மறுப்பதும் ஒரே கட்சியின் தலைமையிலான அரசுதான் என வாதிடப்பட்டது.
இதையடுத்து, அமைச்சரவை மாறியிருந்தாலும், முடிவெடுத்த அரசுகள் ஒன்றுதான் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், பேரறிவாளனின் விடுப்பு (பரோல்) காலம் வரும் 9- ஆம் தேதியோடு முடிவடைவதால், மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையைத் தொடர வேண்டியுள்ளதால், கூடுதல் நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு இன்று (6-11-2020) விசாரணைக்கு வரவுள்ளது.