அக்டோபர் 2- ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமங்கள் தோறும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கிராம சபைக்கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளது. அதனால் தான் கிராம சபை கூட்டங்களில் முக்கிய தீா்மானங்களை நிறைவேற்றி வருகின்றனா்.
அதேபோல தான் கடந்த 2 ஆண்டுகளாக புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் ஏராளமான கிராமங்களில் ஹைட்ரோ கார்பனை திட்டத்தை ரத்து செய் என்று தீர்மானங்களை கொண்டு வந்தனர். பல கிராமங்களில் தீர்மான நோட்டுகளில் எழுதாமல் மனுக்களை மட்டும் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டனர் அதிகாரிகள். ஆனால் நெடுவாசல், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் தீா்மான நோட்டுகளில் எழுதியுள்ளனர்.
பிறகு அந்த தீர்மானங்கள் மீதான நடவடிக்கை என்ன ஆனது என்று ஊராட்சி ஒன்றியங்களில கேட்டால் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியதாகவும், மாவட்ட நிர்வாகம் ஒன்றியத்தில் உள்ளது என்றும் பதில் கூறியுள்ளனர். இந்த நிலையில் தான் இன்று நடந்த கிராம சபைக் கூட்டங்களில் பல்வேறு கிராமங்களிலும் பல முக்கிய தீர்மானங்களை கிராம மக்கள் கொண்டு வந்தனர்.
வழக்கம் போல் முன்னதாக எழுதப்பட்டிருந்த வழக்கமான தீர்மானங்களைத் தவிர பொதுமக்கள் கொடுத்த கோரிக்கைகளை தீர்மான நோட்டுகளில் எழுதாமல் மனுவை கையில் வாங்கிச் சென்றுவிட்டனர். இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி, கொத்தமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் வேண்டாம் என்றும் தமிழ்நாட்டில் செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்க கூடாது என்ற தீர்மானமும், ஏழை மாணவர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் புகுத்தி தமிழக மாணவர்களின் கல்வியை சீரழிக்க கூடாது. அதற்கு தமிழ்நாடு அரசு துணை போக கூடாது. தேசிய கல்விக் கொள்கைளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் மனுவாக கொடுத்தனர்.
மேலும் புதுக்கோட்டை, ராமநாரபுரம், சிவகங்கை உள்ளிட்ட 7 மாவட்ட மக்களின் சுமார் 80 ஆண்டுகால கனவுத் திட்டமான காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இளைஞர்கள் மனுவாக கொடுத்தனர். வழக்கம் போல் கிராம சபை அதிகாரிகள் மனுவை பெற்றுக் கொண்டதுடன், தீர்மான நோட்டில் எழுதாமல் அதிகாரிகளை கேட்டு எழுதிக் கொள்வதாக மனுக்களை பெற்றுச் சென்றுள்ளனர்.