600 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடல் அறிவிப்பு கொடுத்ததை ரத்து செய்யக் கோரிய தொழிலதிபர் சிவசங்கரனின் மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன், ஐ.டி.பி.ஐ வங்கியில் கடன்பெற்று 600 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க, உள்துறை அமைச்சகம் தேடல் அறிவிப்பு கொடுத்துள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிவசங்கரன் வழக்கு தொடுத்தார். அதில், தான் செசல்ஸ் நாட்டின் தூதரக அலுவலர் என்பதால், தனது உரிமைகளைத் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, தான் செசல்ஸ் நாட்டின் தூதரக அலுவலர் என சிவசங்கரன் கூறியதை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும், சிவசங்கரனுக்கு எதிரான வழக்குகளைப் பட்டியலிட்டதுடன், ஒரு நாட்டில் வணிக, தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவரை, தூதரக அலுவலராகக் கருத முடியாது எனத் தெரிவித்தனர்.