![chennai highcourt](http://image.nakkheeran.in/cdn/farfuture/wRFi0IOpLtu_GW36EDxrT8WvHQGdQDBUjfs13n1QjXY/1600971226/sites/default/files/inline-images/bnmnmnm_83.jpg)
நடிகர் சங்கத்திற்கு கடந்தாண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதா, அல்லது மறு தேர்தல் நடத்துவதா என்பது குறித்து பதிலளிக்க நடிகர் விஷால் மற்றும் எதிர் தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளனர்.
கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து, சங்க உறுப்பினர்கள் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் நாசர் ஆகியோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை, நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தேர்தல் முடிந்த பின்னர் வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன் எனப் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும், தொழில் முறை அல்லாத 60 உறுப்பினர்களைத் தவிர்த்து, மற்ற வாக்குகளை எண்ணி, பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும். சங்க உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிறைய உதவ வேண்டியுள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தினர்.
இந்த சட்டப் போராட்டம் மூலம் இரு தரப்பினரும் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? மறு தேர்தல் நடத்துவதாக இருந்தால், மேலும் ஒரு தேர்தல் அதிகாரியை நியமிக்கலாம். மறு தேர்தல் நடத்துவதா, அல்லது வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா என்பது குறித்து இரு தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் ஆலோசனையை இருதரப்பும் ஏற்க மறுத்ததால், நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கை மேற்கொண்டு விசாரிக்க மறுப்பு தெரிவித்ததோடு, வேறு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.