கரையைக் கடந்த 'புரெவி' புயல் மன்னார் வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டுகிறது. நேற்றிரவு வரை மிதமான மழை பெய்த நிலையில் அதிகாலை 05.30 மணிக்கு மேல் கனமழை கொட்டியது.
தென் மாவட்டங்களில் மழை கொட்டும் என எதிர்பார்த்த நிலையில் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் கனமழை காரணமாக ஜி.எஸ்.டி. உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளன.
அதேபோல், தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.