![dfg](http://image.nakkheeran.in/cdn/farfuture/3I07vKX74BoKFLIYeFxxwh2Srh8WZ4JROZmlJ-8pVc8/1642483120/sites/default/files/inline-images/corporation_2.jpg)
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில் அதற்கான ஆயத்த வேலைகளை மாநில அரசு வேகமாக செய்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் பெண்கள் போட்டியிடும் மாநகராட்சிகளின் பெயர்களை தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியும் பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின (பொது) பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சி மேயர் பதவியும் பெண்களுக்கு (பொது) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் எந்தப் பிரிவினர் எத்தனை வார்டுகளில் போட்டியிடலாம் என்ற அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டியலினத்தவர்களுக்கு 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 16 வார்டுகள் பெண்களுக்கும், 16 வார்டுகள் பட்டியலின பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுப்பிரிவில் 84 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த முறை அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மாநகராட்சியை அலங்கரிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.