இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த 15.12.2019ல் நடைபெற்றபோது ‘பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார்’ ஆகிய புகையிலைப் பொருட்கள் விளம்பரம் செய்யப்பட்டன. தொலைக்காட்சிகள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டன.

கிரிக்கெட் மைதானத்தில் புகையிலை பொருள் விளம்பரங்கள் வைக்கப்படுவதும், தொலைக்காட்சி மூலம் விளம்பரப்படுத்தப்படுவதும் இந்திய புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டப்படி குற்றம் என தெரிவித்து, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புகையிலை விளம்பரங்கள் வைப்பதை தடுக்க வேண்டும் எனக்கோரி என தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதினார். அதனை தொடர்ந்து பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் டிசம்பர் 13 ஆம் நாள் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ‘பான் பஹார், பாபா, சைனி கைனி, கம்லா பசந்த், ஷிகார்’ உள்ளிட்ட எந்தவொரு புகையிலை பொருட்கள் விளம்பரங்களையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இனி வைக்கக்கூடாது என உத்தரவிட்டு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.