சென்னை விமான நிலையத்தில் ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "விமான நிலையங்களில் கரோனா சோதனையை அதிகப்படுத்தி உள்ளோம். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் அனைவருக்கும் கரோனா சோதனை நடக்கிறது. கரோனா பரவாமல் தடுக்க முதலில் கிருமி நாசினியை கொண்டு நன்றாக அடிக்கடி கை கழுவ வேண்டும். தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.
கரோனா குறித்து பயப்படவும் வேண்டாம்; பீதியை கிளப்பவும் வேண்டாம். தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சீனாவில் சராசரியாக 100 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 2 பேர் மட்டுமே உயிரிழப்பு. இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் அவசியம் மருத்துவமனை செல்லவும். தனியார் மருத்துவமனைகளிலும், கரோனா சிகிச்சைக்கான வசதிகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
![chennai airport coronavirus screening minister vijayabaskar press meet](http://image.nakkheeran.in/cdn/farfuture/IFR5Z5aaXquRI9khLu5OowEX4qYAlhwxGAhABNsj1Fc/1583472208/sites/default/files/inline-images/vijaya%20baskar444.jpg)
தமிழகத்தில் விமான நிலையங்கள், துறைமுகங்களைத் தொடர்ந்து ரயில் நிலையங்களிலும் கரோனா சோதனை தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 52 பேரின் ரத்த மாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்டதில் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. வெப்பநிலை அதிகமாக இருந்தால் கரோனாவில் தாக்கம் குறையும் என்பது பற்றி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. வெப்பநிலை அதிகமாக இருந்தால் கரோனா குறையும் என்றால் வட மாநிலங்களில் பரவியிருக்காதே.
தமிழகத்தில் கரோனா இருக்கிறதா என்ற சந்தேகத்தில் 1,654 பேரை கண்காணித்து அனுப்பினோம். காற்றிலே பரவக்கூடிய கரோனாவை தடுப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது; அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். கரோனாவை தடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை." இவ்வாறு அமைச்சர் பேசினார்.