திருச்சி விமானநிலைய ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 7- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான உறுப்பினர்கள் நியமனம் அவசர அவசரமாக நடைபெற்றது. இதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் திருச்சி விமான நிலைய ஆலோசனைக் குழு உறுப்பினராக திருச்சி மாவட்ட மாநகர அதிமுக பொருளாளர் அய்யப்பன் மற்றும் அதிமுக பிரமுகர் ஜாக்குலின் ஆகியோரை விமான நிலைய ஆலோசனை குழுவின் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி. நியமனம் செய்திருப்பதாக விமான நிலைய இயக்குனர் அறிவித்திருக்கிறார் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியானவுடன், அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்களுக்கிடையே பெரிய பரப்பை உண்டாக்கியுள்ளது.
திருச்சி மாவட்ட காங்கிரசார் சமூக வலை தளங்களில் “பாருங்கள். திருநாவுக்கரசர் தன் பழைய பாசத்தைக் காட்டிவிட்டார். அதிமுகவின் மாவட்டப் பொருளாளருக்கு ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவி கொடுத்துவிட்டார்” அதிமுக காரனுக்கு பதவி உழைத்த காங்கிரஸ்காரன் ஏமாளியா? என வறுத்தெடுக்க ஆரம்பித்தனர். அதேபோல அதிமுகவிலும் உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் காங்கிரஸ்காரனிடம் பதவிக்காக போய் நிற்கிறார்களே, ஆளும் கட்சியாக இருந்து கொண்டு இப்படி போய் பதவிக்காக கையேந்தி நிற்கலாமா என்று பரபரப்பு பேச்சு வலம் வர ஆரம்பித்தது.
இது குறித்து திருநாவுக்கரசருக்கு தரப்பு கூறுகையில், இந்திய அரசின் விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் கொள்கை முடிவின் படி விமான நிலைய ஆலோசனைக் குழுவுக்கு விமான நிலையம் அமைந்திருக்கும் தொகுதியின் எம்.பி. தலைவராக இருப்பார். இந்த் மாவட்ட தொடர்புள்ள சட்டமன்ற உறுப்பினர் மாற்றுத்தலைவராக இருப்பார். விமான நிலைய ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக முறையே வணிகம், தொழில், போக்குவரத்துத் துறை சார்ந்த மூவரை மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்து நியமிப்பார். இந்த வகையில் திருநாவுக்கரசர் விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவராக இருக்க, துணைத்தலைவராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இருக்கிறார். தலைவர் என்ற வகையில் திருநாவுக்கரசர் 8 உறுப்பினர்களை நியமித்திருக்கிறார்.
அவர்களில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்ற உறுப்பினர்களான அன்பில் மகேஷ், பெரியண்ணன் அரசு, மற்றும் அன்பழகன் உள்பட நால்வரும் திமுகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், பாட்ரிக், ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் திரவியநாதன் ஆகியோரையும் திருநாவுக்கரசர் நியமித்திருக்கிறார்.
ஆலோசனைக் குழு மாற்றுத் தலைவராக இருக்கும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மாவட்ட அதிமுக பொருளாளரான மலைக்கோட்டை அய்யப்பன், ஜாக்குலின் ஆகியோரை உறுப்பினர்களாக சிபாரிசு செய்துள்ளார். அமைச்சர் சிபாரிசு என்பதால் குழுவின் தலைவரான திருநாவுக்கரசருக்கு வேறு வழியில்லை. மேலும் இந்த இருவரின் நியமனமும் தலைவரின் பெயரில்தான் அறிவிக்கப்படும் என்பதால் அதிமுக உறுப்பினரையும் திருநாவுக்கரசரே நியமித்தார் என்று செய்தி வந்துவிட்டது. இதுதான் நடந்தது”என்று திருநாவுக்கரசர் தரப்பில் விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.
ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டி பொதுசெயலாளர் திருச்சி சார்லஸ் என்பவர் நம்மிடம் கூறுகையில், இதற்கு முன்பு இப்படி எல்லாம் கிடையாது. தலைவர் யாரை எழுதி கொடுக்கிறாரோ அவருக்கு அதன் அந்த பொறுப்புளை அதிகாரிகள் நியமிப்பார்கள். இவர் ஆளும் கட்சியினரோடு அனுசரித்து செல்வது சரியா? எதிர்த்து அரசியல் செய்ய வேண்டாமா, அமைச்சர் வெல்லமண்டி சிபாரிசு செய்து கேட்டால் இவர் எழுதிக்கொடுக்கலாமா? இப்படி செய்யதால் அரசியல் கட்சியினரிடையே நம்பிக்கை தன்மை இழந்து விடும் நிலை ஏற்படுமே! என்று ஆதங்கப்பட்டனர்.
இதற்கிடையில் நாம் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசரை தொடர்பு கொண்டோம். அவருடைய உதவியாளர் போனை எடுத்து அவர் ஒரு மீட்டிங்கில் இருக்கிறார். வந்தவுடன் பேச சொல்கிறேன். என்றார்.
மேலும் இது குறித்து நாம் திருச்சி விமானநிலைய இயக்குநர் குணசேகரனிடம் பேசினோம். அவரோ சார்… எம்.பி. தன்னுடைய கடித்தில் யார் யார் நியமிக்க சொல்லி எழுதியிருக்காரோ அவர்களுக்கு எல்லாம் நியமனம் செய்திருக்கிறோம். அவர்கள் சொல்லும் அரசியல் எல்லாம் எனக்கு தெரியாது சார். என்றார். எது எப்படியோ திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் ஆளும் கட்சி அமைச்சர் சிபாரிசில் ஆளும் கட்சியினருக்கு பொறுப்பு நியமனம் செய்ததும், காங்கிரஸ் எம்.பியிடம் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு பொறுப்புக்காக அமைச்சர் சிபாரிசு செய்ததும் திருச்சியில் அரசியல் கட்சியினர் இடையே ஏற்பட்டிருக்கும் சலசலப்பு ஓயாது என்றே தெரிகிறது.