தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.
இது வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதாவது இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும். அதே சமயம் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி வராது என்றாலும் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பில் இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும். இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (22.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 21 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே இந்த 4 மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. மேலும் தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (23.05.2024) கனமழை பெய்ய வாய்ப்பு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.