போகி பண்டிகை புகைமூட்டம் மற்றும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
நாளை தைப்பொங்கல் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இன்று போகி பண்டிகை இன்று காலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. பழைய பொருட்களை எரிப்பதால் அதிக அளவிலான காற்று மாசு ஏற்பட்டது. இருப்பினும் சென்னையில் பல இடங்களில் மழைபொழிந்ததால் காற்று மாசு குறைந்துள்ளது. அதே நேரம் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது.
குறிப்பாக சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள மீனம்பாக்கம், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதிகளில் புகை மற்றும் பனி சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மூன்று விமானங்கள் தற்போது வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து 30 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை இதன் காரணமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது. 9.30மணிக்கு மேல் அடுத்து வரும் அறிவுறுத்தலுக்கு பிறகு விமானங்கள் திட்டமிட்டபடி இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேநேரம் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பிற்பகல் ஒரு மணிவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.