சமீபமாகவே திருப்பதியில் பேசுபொருளாகும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு திருப்பதியில் லட்டு விவகாரம் பூதகரமாகி இருந்தது. ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.
அண்மையில் சில நாட்களுக்கு முன்பு திருப்பதி வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் முன்பதிவுக்காக முண்டியடித்த கூட்டத்தில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட ஆறு பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது திருப்பதியில் லட்டு விநியோகிக்கும் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
47-ஆம் எண் கொண்ட லட்டு விநியோகம் செய்யும் மையத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தால் அந்த மையத்தில் புகைமூட்டம் சூழ்ந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.