டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் நடைபெறும் தேர்தலில் வெற்றி வெற்றிப் பெறுவதற்காக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய 3 கட்சிகள், டெல்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
இந்த தேர்தலையொட்டி, நேற்று முன் தினம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று நாங்கள் கூறினோம். அரவிந்த் கெஜ்ரிவால் கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்று கூறுவார். 500 ஆண்டுகால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டினோம். பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் 3.58 கோடிக்கும் அதிகமான ஏழைகளுக்கு வீடுகளை வழங்கியுள்ளார். இது மோடியின் உத்தரவாதம், குடிசைப் பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு வழங்கப்படும். கெஜ்ரிவாலின் ஷீஷ் மஹாலில் உள்ள கழிப்பறை, ஸ்லெம்களை (Slum) விட விலை அதிகம்” எனத் தெரிவித்திருந்தார்,
அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துக்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லி ஷாகுர் பஸ்தி பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “பாஜக தலைவர்கள் வெவ்வேறு ஸ்லெம்களில் ஒரு இரவைக் கழித்ததை சமீபத்தில் பார்த்தோம். ஏன் இப்போது? 10 வருடங்களுக்கு முன்பு நீங்கள் ஏன் இங்கு இரவில் தூங்க வரவில்லை? இது அனைத்தும் வாக்குகளைப் பெறுவதற்கான நாடகமே தவிர வேறில்லை. பாஜக பணக்காரர்களின் கட்சி. ஸ்லெம் குடியிருப்பாளர்களை நேசிப்பதால் அவர்கள் இங்கு நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, அவர்கள் உங்களிடமிருந்து வாக்குகளைப் பெறுவதற்காக அன்பைக் காட்டுகிறார்கள். ஜஹான் ஜுகி வஹான் மகான் திட்டத்தின் கீழ் மக்கள் வீடு பெற்றுவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதே நேரத்தில் பா.ஜ.க ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பே இந்தப் பகுதியை காலி செய்ய விரிவான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் அவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்தால், இரண்டு மாதங்களுக்குள் அவர்கள் உங்களை வீடற்றவர்களாக மாற்றுவார்கள். அவர்கள் மக்களை நேசிப்பதில்லை, யாரையும் கவனிப்பதில்லை. அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அரசியல் லட்சியங்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்.
ஸ்லெம் மக்கள் மீது நீங்கள் தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுங்கள். மேலும் அவர்கள் முன்பு வாழ்ந்த அதே நிலத்தில் உள்ள அனைவருக்கும் வீடுகள் வழங்குவதாக நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்பித்தால், நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த சவாலை நான் உங்களுக்கு வழங்குகிறேன், அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையெனில், கெஜ்ரிவால் எங்கும் செல்லமாட்டார். நாங்கள் தேர்தலில் போராடுவோம், வெற்றி பெறுவோம், ஸ்லெம் மக்களுக்காக ஒரு தூண் போல நிற்போம், அவர்களின் வீடுகளை இடிக்க உங்களை அனுமதிக்க மாட்டோம். நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், அது உங்கள் தற்கொலைக் குறிப்பில் கையெழுத்திடுவது போலாகும். டெல்லியில் உள்ள அனைத்து குடிசைகளையும் இடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அரசாங்கம் அமைத்த ஒரு வருடத்திற்குள் அவர்கள் அனைத்து குடிசைகளையும் இடித்துவிடுவார்கள். அனைத்து அதிகாரிகளையும் எழுப்பி, இடிப்பு செயல்முறையை நிறுத்த நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு வந்த ஒரே முதல்வர் நான்தான். முதலமைச்சராக பல இடிப்புகளை நான் காப்பாற்றியிருந்தேன். 3 லட்சம் மக்களின் வீடுகளைக் காப்பாற்றத் தவறிவிட்டேன். நான் பணத்திற்காக அரசியலில் இல்லை; உங்களுக்கு சேவை செய்யவே நான் இங்கு இருக்கிறேன்” என்று கூறினார்.