Skip to main content

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Chance of rain in 7 districts including Chennai

தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த சென்னை வானிலை மைய அறிவிப்பில், ‘இன்று முதல் ஏழு நாட்கள் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவடங்களின் ஒரு சில இடங்களில் இரண்டு நாட்களுக்குக் கனமழை இருக்கும். அடுத்த ஐந்து நாட்களுக்குத் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரவும் வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கனமழை எதிரொலி காரணமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தென்காசி, திண்டுக்கல், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னையில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
chennai mtc bus no 102 incident

சென்னை பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லக்கூடிய 102 ஆம் எண் கொண்ட சென்னை மாநகர அரசு பேருந்து ஒன்று அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நடுவழியிலேயே இந்த பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் பேருந்தின் மற்ற பகுதிகளில் மளமளவென தீப்பிடித்து. இதனால் பேருந்து முழுவதும் எரிய தொடங்கியது.

இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைந்தனர். முன்னதாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக பேருந்தை விட்டு பாதுகாப்பாக இறங்கி விட்டனர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சாலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த மக்களிடையே  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

சென்னை இளைஞரின் செயல்; பாய்ந்தது புதிய குற்றவியல் சட்டம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Bathing video incident;  Chennai Youth Arrested Under New Penal Code

ஜூலை ஒன்றான நேற்று முதல் நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முதன் முதலாக டெல்லியில் பாதசாரியில் கடை வைத்திருந்த நபர் மீது பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன்முறையாக இளைஞர் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள பெண் குளித்துக்கொண்டிருந்ததை வீடியோ எடுத்த புகாரில் 'பாரதிய நியாய சன்ஹீதா' சட்டத்தின் படி போலீசார் கைது செய்துள்ளனர். சாரதி என்ற அந்த நபருக்கு பழைய சட்டப்பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய சட்ட பிரிவிலும் அதே தண்டனை குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இருப்பினும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.