விஜய் மற்றும் ஏ. ஆர். முருகதாஸின் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் சர்கார். தொடக்கத்திலிருந்தே இந்த படம் நிறைய பிரச்சனைகளை சந்தித்தது. நாளை படம் வெளியாக உள்ளது. இந்நிலையில்,
சில நாட்களுக்கு முன்னர், சர்கார் படத்தை டிவி மற்றும் இணையதளத்தில் வெளியிட தடை விதித்தது நீதிமன்றம். இதைத்தொடர்ந்து இன்று சர்கார் படத்தை ஹெச்.டி.யில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்திலிருந்து ஒரு ட்வீட் வெளியானது. அதற்கு உடனடி எதிர்ப்பை தெரிவித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
சர்கார் படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம், திரையரங்குகளில் கண்காணிப்பு நபர்களை நியமித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். என திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது. யாரேனும் திரைப்படத்தை பதிவு செய்தால் அவர்களை உடனே காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், ஒன்றாக இணைந்து செயல்பட்டு தமிழ் ராக்கர்ஸ் திருடனை வெல்ல விடாமல் முறியடிப்போம். திரையரங்குகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம். சர்கார் படத்தின் ஹெச்.டி. பிரிண்ட் இணையதளத்தில் வெளியாகும் என தமிழ் ராக்கர்ஸ் பெயரில் ட்வீட் வந்தது.
தஞ்சாவூரில் உள்ள ராணி பேரடைஸ் தியேட்டரில் நாளை சர்கார் படம் வெளியாகவில்லை. இதுகுறித்து அதன் உரிமையாளர், விஜய் நற்பணி மன்றத்தினர் முதல் 10 காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்களையும் கேட்டனர். அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. இதனால் சர்கார் படத்தை வெளியிடும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கவில்லை, இதுகுறித்து நாங்கள் சர்கார் படக்குழுவினரை தொடர்புகொள்ள முயற்சித்தும், தொடர்புகொள்ள முடியவில்லை. எனக் கூறினார்.